Monday, May 19, 2014

சித்தம் கலங்கிய மெசபடோமியா நாட்டு அரசனும் , ஒரு புத்திசாலி இளைஞனும் ! - புதிர் கதை

மெசபடோமியா நாட்டைச் சேர்ந்த அரசன் ஒருவனுக்கு திடீரென்று சித்தம் கலங்கி விட்டது. தன்னை ஒரு காளை மாடாக நினைத்துக்கொண்டான். அந்த நாட்டில் காளைகளைக் கொன்று உண்பது வழக்கத்தில் இருந்தது.
அரசனும், " நான் ஒரு மாடு . என்னைக் கொன்று அனைவரும் உண்டு மகிழுங்கள். என்னை வெட்டுங்கள்.உண்ணுங்கள்" என்று எந்த
நேரமும் கூச்சல் போட்டுக்கொண்டிருந்தான். அனைவரும் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்தார்கள். அரண்மனை மருத்துவரை அழைத்து விபரம் கூற , அவரும் அரசனுக்கு வந்துள்ள சித்தக் கலக்கத்தை சுலபமாகப் போக்கிவிடலாம். அதற்கு சக்தி வாய்ந்த மருந்துகள் உள்ளன என்று கூறிவிட்டு, மருந்தினைத் தயார் செய்தார்.
மருந்தை அரசனுக்குக் கொடுத்தபோது அவன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, என்னை எப்போது வெட்டப் போகிறீர்கள் என்பதையே கிளிப்பிள்ளை போலத் திருப்பிச் திருப்பிச் சொல்லிக்கொண்டு பட்டினியாகவே கிடந்தான். அதனால் அவனது உடல் நலம் மேலும் சீர்கெட்டது. அரசனை எப்படியாவது சாப்பிட வைத்துவிடவேண்டும் என்று பலரும் பலவிதமாக முயற்சித்தும் தோல்வியே அடைந்தார்கள்.
அப்போது அவிசென்னி என்ற ஒரு புத்திசாலி இளைஞன் இதைப் பற்றிக் கேள்விப்பட்டான். "அரசனை நான் சாப்பிட வைத்துவிடுவேன்" என்று கூறிக்கொண்டு அரண்மனைக்கு வந்தான். அமைச்சர்களும் அவனை அரசனிடம் அழைத்துச் சென்றனர்.
அரசனைப் பார்த்த அவிசென்னி, முதலில் அரசனது பேச்சுக்களை முழுமையாகக் காதில் வாங்கிக் கொண்டான். பிறகு அரசனை தொட்டுப் பார்த்தபடி அரசனிடம் சில வார்த்தைகளைப் பேசினான். பின்பு காவலாளிகளைப் பார்த்து சில கட்டளைகளைப் பிறப்பித்தான். அவன் கூறியபடி காவலாளிகள் செய்ததும் அரசன் மிகுந்த ஆர்வமுடன் சாப்பிட ஆரம்பித்தான்.
அதன் பிறகு மருத்துவர் அரசனது உணவுடன் மருந்தினையும் சேர்த்துக் கொடுத்தார். ஒரு மாத காலத்தில் அரசன் சித்தக் கலக்கம் நீங்கி முழுமையாகக் குணமடைந்தான்.பிறகு தான் குணம் அடையக் காரணமாக இருந்த அவிசென்னியை அழைத்து, ஆரத் தழுவி, அமைச்சர் பதவி கொடுத்து தன்னுடனேயே வைத்துக்கொண்டான்.

நண்பர்களே.....அவிசென்னி என்ன தந்திரம் செய்து அரசனைச் சாப்பிட வைத்திருப்பான்.??
.
.
.
.
.
.
.
.
புதிர் விடை :-------->


அரசர் தன்னை மாடாக நினைத்து பேசுகிறார் என்பது தெரிந்தது...
அவிசென்னி அரசனை தொட்டு.... அனைவரும் நல்ல கொழு கொழு என்றுள்ள மாட்டைத்தான் விரும்பி உண்பர். நீரோ எலும்பும், தோலுமாக உள்ளீர். சில காலம் நல்ல சாப்பாட்டை சாப்பிட்டு உடல் நன்கு தேறினவுடன்.. உங்களை வெட்டி அனைவரும் உண்ணலாம் என்று கூறி.... காவலாளிகளை அரசனை மாடு போல் பாவித்து... மாடுகளுக்கு உணவு பரிமாறும் விதமாக பரிமாற சொல்லியிருப்பான்.... அரசனும் தன்னை மாடாகவே நினைத்து உணவு உண்டு இருப்பான்....