Monday, June 30, 2014

ஒரு ஊரில் , ஒரு ராஜா !

ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.



அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர்'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.


இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி,புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''

''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும்,திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே

இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலம்!

இப்போது ஒருவன் கடுமையாக உழைக்கிறானே அதுதான் அவனுடைய வருமானமாகப் பின்னால் வரும்!

இப்போது ஆழ்ந்து படிக்கும் மாணவனுக்கு அதுதான் தேர்ச்சி என்று ஒரு எதிர்காலத்தைக் கொண்டுவரும்.

அப்படிப் பார்த்தால் எல்லாமே இப்போது நாம் செய்வது செய்து கொண்டிருப்பதுதான் நம் நாளைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அவை ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சிறப்பாகச் செய்தால் நம் வாழ்க்கை எவ்வளவு மேன்மையாக அமையும்!

எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், அந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். நன்றாக இருக்கும் என்று நாம் உணர்ந்த பின் அதை செயல்முறை படுத்துங்கள் பின் வெற்றி நமக்கே !

இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்! வாழ்த்துகள் !!
------------ --------- --------- --------- --------- --------- -------

நாளை விடியுமென்று விண்ணை நம்பும்போது
நம்மால் முடியுமென்று உன்னை நம்பு!!

பக்கத்து நாட்டுத் தூதுவன் [புதிர்]


ஒரு நாட்டின் அரசவை கூடியிருந்தது. அரியனையில் அரசன் கம்பீரமாக வீற்றிருந்தான்.
அப்போது பக்கத்து நாட்டுத் தூதுவன் ஒருவன், அங்கு வந்தான்.அரசனைப் பணிவாக வணங்கினான்.
"தூதனே! உங்கள் நாட்டு அரசரிடம் இருந்து எனக்கு என்ன செய்தி கொண்டு வந்திருக்கின்றாய்?" என்று கேட்டான் அரசன்.
அவனோ ஏதும் பதில் கூறாமல் அமைதியாக நின்றான்.
"தூதனே!!....எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்" என்றான் அரசன்.
தூதுவன் தனது பையில் இருந்து ஒரு கோலக் கட்டியை எடுத்தான். அந்தக் கோலக்கட்டியினால், அரசனது அரியனையைச் சுற்றிலும் வட்டமாகக் கோடு போட்டான்.பிறகு ஏதும் பேசாமல் அமர்ந்துவிட்டான்.
அவன் ஏன் அப்படிச் செய்தான் என்று அரசனும் மற்றவர்களும் அவனைக் கேட்டார்கள். தூதுவனோ பதிலே பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.
தூதனின் செய்கையினால் அரசன் குழப்பம் அடைந்து, தனது அமைச்சர்களைப் பார்த்து, யாருக்காவது பொருள் புரிகிறதா? என்று கேட்டான்.எந்த அமைச்சரும் அதற்குப் பதில் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். ஏனென்றால் தூதுவனின் செய்கையினால் அவர்களும் குழப்பம் அடைந்திருந்தார்கள்.
அப்போது வயதில் மூத்த அமைச்சர் ஒருவர் எழுந்தார். " அரசே!!!...இந்தத் தூதுவனின் செய்கையில் ஏதோ ஒரு உட்பொருள் இருக்கிறது. நமது நகரத்தில் மாணிக்கம் என்று ஒரு அறிஞர் இருக்கிறார். அவர் புத்தி கூர்மை மிக்கவர். அவரால்தான் இதற்குப் பொருள் கூற இயலும். அதனால் அவரை அழைத்துவர உத்திரவிடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.
அரசனும் வீரர்களுக்கு உத்திரவு கொடுத்தான். வீரர்கள் மாணிக்கத்திடம் சென்றார்கள். அரசன் அழைப்பதாகக் கூறினார்கள்.மாணிக்கம் என்ன நடந்தது என்பதை வீரர்களிடம் விசாரித்துத் தெரிந்துகொண்டார். சிறிது ஆலோசனை செய்தார். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவராக, இரண்டு கோலி குண்டுகளைத் தேடியெடுத்து பையில் போட்டுக்கொண்டார்.உயிருள்ள ஒரு கோழியை கையில் பிடித்துக்கொண்டார்.
வாருங்கள் போகலாம் என்று வீரர்களுடன் அரசவைக்கு வந்து சேர்ந்தார்.
அரசவைக்கு வந்ததும் அரசனை வணங்கினார்.பிறகு அங்கே அமர்ந்திருந்த தூதுவனைப் பார்த்து நகைத்தார்
.தனது பையில் போட்டிருந்த கோலிக் குண்டுகளை எடுத்து, அவன் முன்னே உருட்டிவிட்டார்.
அதைக் கண்ட தூதுவன், தான் கொண்டு வந்திருந்த பையில் இருந்து நெல்லை எடுத்தான்.
அதை சபையில் எறிந்தான்.நிறைய நெல் அங்கே தரையெல்லாம் சிதறியது.
உடனே மாணிக்கம் தனது கையில் பிடித்திருந்த கோழியை இறக்கிவிட்டார்.
சிதறிக்கிடந்த நெல் முழுவதையும் கொத்தித் தின்றுவிட்டது.
அதைக் கண்டு திகைத்து நின்ற தூதுவன், அரசனை வணங்கிவிட்டுத் தன் நாட்டுக்குப் புறப்பட்டுப் போனான்.
அரசவையில் இருந்தவர்களுக்கு என்ன நடக்கிறது என்று ஒன்றுமே புரியவில்லை
.தூதனும் மாணிக்கமும் நடந்துகொண்ட விதம் ஒரே புதிராக இருந்தது.
என்ன நடந்தது என்று தெளிவுபெற விரும்புகிறான் அரசன்.
மாணிக்கம் விளக்கம் சொல்வதற்கு முன்பாக மன்ற நண்பர்களே நீங்கள் கூறுங்களேன்!!!







நான்கு பஞ்சு வியாபாரிகள் [புதிர்]..

நான்கு பஞ்சு வியாபாரிகள் இருந்தனர்.
பஞ்சை எலிகள் நாசமாக்கிவிடுவதால் அவற்றைப் பிடித்துத் தின்ன ஒரு பூனை வளர்த்தனர்.
பூனையின் நான்கு கால்களையும் ஒவ்வொருவரும் பிரித்துக்கொண்டு பராமரித்தனர். அவரவர் கால்களுக்குத் தங்க மோதிரம், சங்கிலி எனப் போட்டு அழகு பார்த்தனர்.

ஒருநாள் பின்னங்கால் ஒன்றில் பூனைக்கு அடிபட, அந்தக் காலுக்கு உரிய வியாபாரி மண்ணெண்ணெயில் பஞ்சை நனைத்துக் கட்டுப்போட்டார்.

அந்த நேரம் பார்த்து பூனை அடுப்போரம் ஒதுங்க, காயம்பட்ட காலில் தீ பிடித்துக்கொள்கிறது. தன் காலில் தீயைப் பார்த்ததும் மிரண்ட பூனை, பயந்து பஞ்சு கோடவுனுக்குள் ஓட, பல லட்ச ரூபாய் பஞ்சு எரிந்து நாசமானது.
அதற்கு நஷ்டஈடு கேட்டு மற்ற மூன்று வியாபாரிகளும் அந்த எரிந்த காலுக்குரிய வியாபாரி மீது வழக்குத் தொடுத்தனர்.

ஆனால், இந்த மூன்று வியாபாரிகளும்தான் அந்த வியாபாரிக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வருகிறது.

ஏன் நீதிபதி அப்படித் தீர்ப்பளித்தார்?
.
.
.
.
.
.


Monday, June 23, 2014

பில் கேட்சுக்கு ஒரு கடிதம்….



புதிதாக கம்ப்யூட்டர் வாங்கிய x, சிறிது நாட்களில் பில் கேட்சுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அதில்:

அன்பிற்குரிய பில் கேட்ஸ்,

சில நாட்களுக்கு முன் நான் வாங்கிய கம்ப்யூட்டரில் சில பிரச்சினைகள் உள்ளன. அவற்றை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

1. கம்ப்யூட்டரில் ‘Start’ பட்டன் உள்ளது. ஆனால், ‘Stop’ பட்டன் இல்லை. இதை சரிபார்க்கவும்.

2. ‘Run’ என்ற மெனு உள்ளது. எனது நண்பர் ‘Run’ ஐ கிளிக் செய்துவிட்டு ஓட ஆரம்பித்தார். அவர் இப்போது அமிர்தசரஸ் பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறார். அவரை உட்கார வைப்பதற்கு ‘Sit’ மெனு இருக்கிறதா என்பதைத் தெரியப்படுத்தவும்.

3. உங்க விண்டோஸில் நான் ‘Recycle bin’ஐ மட்டும்தான் பார்த்தேன். ‘Re-scooter bin’ இருக்கிறதா? ஏனென்றால் என் வீட்டில் ஸ்கூட்டர் மட்டும்தான் உள்ளது.

4. ‘Find’ பட்டன் கொடுத்துள்ளீர்கள். ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை. என் மனைவி, வீட்டுச் சாவியைத் தொலைத்தபோது, ‘Find’ பட்டனை உபயோகித்தோம். ஆனால் அது தேடித் தரவில்லை. இதை சரிசெய்யவும்.

5. என்னுடைய பையன் ‘Microsoft word’ கற்றுக் கொண்டான். இப்போது ‘Microsoft sentence’ கற்றுக்கொள்ள விரும்புகிறான். அதை எப்போது வழங்குவீர்கள்?

6. விண்டோஸில் ‘My Pictures’ உள்ளது. ஆனால் என் போட்டோ ஒன்று கூட அதில் இல்லை. கூடிய சீக்கிரம் என் போட்டோ ஒன்றை அதில் போடவும்.

7. ‘Microsoft office’ உள்ளது. சரி, ‘Microsoft Home’ எங்கே? ஏனென்றால் கம்ப்யூட்டரை நான் வீட்டில்தான் பயன்படுத்துகிறேன்.

8. ‘My Network Places’ கொடுத்துள்ளீர்கள். நல்லவேளை, ‘My Secret Places’ கொடுக்கவில்லை. அதை இனிமேலும் தரவேண்டாம். ஏனென்றால் அலுவலகம் முடிந்து நான் எங்கெல்லாம் போகிறேன் என்பதை என் மனைவி அறிந்து கொள்வதை நான் விரும்பவில்லை.

9. இறுதியாக ஒரு சந்தேகம். நீங்கள் ‘Windows’ விற்கிறீர்கள். ஆனால் உங்கள் பெயரில் ‘Gates’ உள்ளது ஏன்?

முட்டாள் வேலைக்காரங்க..

ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க.

ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்’ னு. மறுத்த அடுத்தவர், ‘வாய்ப்பே இல்ல, என் வேலைக்காரனப் பத்தி தெரியாம சொல்றீங்க’ ன்னாரு.

சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

பத்து பைசாவை கொடுத்து ‘கடைக்கு போய், நல்லா பாத்து இன்னோவா கார் ஒன்னு வாங்கிட்டு வா’ ன்னாரு.

‘சரிங்க அய்யா’ ன்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான்.

‘பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்க’ ன்னாரு.

‘கொஞ்சம் பொறுங்க’ ன்னு சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான்.
‘சொல்லுங்கைய்யா என்ன செய்யனும்’ னான்.

‘அவசரமான விஷயம், வீட்டுல போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வா’ ன்னாரு.

‘உடனே பாத்துட்டு வர்றேன்’ னு அவனும் கிளம்பிட,

‘பாத்திங்களா, என் ஆள’ ன்னாரு. மொத ஆளு ‘எப்பா உன் ஆளுதான் அருமை ’ னு தோல்விய ஒத்துகிட்டாரு.

அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்க. ஏற்கனவே பாத்துகிட்டதனால, ஒருத்தன் சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட,

‘என் மொதலாளிய மாதிரி முட்டாள் இந்த உலகத்திலேயே இல்ல’ ன்னான்.

‘எப்படி சொல்றே’ ன்னான் அடுத்தவன்.

‘பத்து பைசாவ கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வர்ற சொல்றானே?, இன்னிக்கு ஞாயித்து கிழமை, கடை இருக்குமா’ ன்னான்.

‘அட அதாவது பரவால்ல, மறந்து போயி சொல்லியிருக்கலாம், ஆனா எங்க ஆளு போயி அவரு இருக்காரான்னு வீட்டுல போயி பாத்துட்டு வரனுமாம். அவருகிட்டதான் செல் போன் இருக்குல்ல, போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம்ல’ ன்னான்.

எவ்வளவு தான் துன்பங்கள் இருந்தாலும் நகைச்சுவை நம் கவலைகளைப் போக்கி நம்மை உற்சாகப்படுத்துகின்றது. சிரிக்க வைக்க முயற்சி செய்யாவிடினும், நகைச்சுவைகளை படித்து, பார்த்து சிரித்து மகிழ்வோம்....

பாரில் நம்ம நாராயணசாமி....

சனிக்கிழமை ...

டாஸ்மாக் பாரில் ஒரு டேபிளில் உக்காந்து தண்ணி அடித்து கொண்டிருந்தார் நம்ம நாராயணசாமி.

டேபிள் மேல் இருந்த செல்போன் ஒலித்தது.. எடுத்து ஸ்பீக்கர் மோடில் போட்டு,

"ஹலோ" என்றார்.

"என்னாங்க நான் ஷாப்பிங் வந்தேன்.. ஒரு லட்ச ரூபாயில் நகை பார்த்தேன்.. எடுத்துக்கவா..." என்றது மறுமுனை.

"எடுத்துக்கோ உனக்கு இல்லாத காசா..."

"இருபதாயிரம் ரூபாயில் பட்டு புடவை ஒண்ணு எடுத்துகிறேங்க..."

"ஒண்ணு போதுமா டார்லிங்... இரண்டா எடுத்துக்கோ.."

"சரிங்க..உங்க கிரெடிட் கார்டு எடுத்துட்டு வந்தேன்..எல்லாத்தையும் அதுலே வாங்கிக்கவா..."

"ஒக்கே டார்லிங்..தாராளமா வாங்கிக்க.." என்று சொல்லிவிட்டு போனை வைத்தார் மேஜையில் வைத்தார் நாராயணசாமி.

சுற்றி அமர்ந்து இருந்த நண்பர்கள் ஆச்சரியத்துடன்,

"என்னடா இது உன் பொண்டாடிக்கு இவ்ளோ செலவு பண்ண சரின்னு சொல்லிட்ட... நீ அவ மேல அவ்ளோ அன்பா வச்சி இருக்க... கிரேட் மச்சி...' என்றார்கள்.

ஆனால் நாராயணசாமியோ பக்கத்து மேஜையில் அமர்ந்து இருந்தவர்களிடம் விசாரித்து கொண்டிருந்தார்,

"எக்ஸ்கிஸ் மி சார் ... இந்த மொபைல் போன் யாரோடது...?"

ஒரு அரசியல்வாதி.....

ஒரு பலசரக்கு வியாபாரி, ஒரு ஆசிரியர், ஒரு அரசியல்வாதி மூவரும் ஒரு காட்டுக்குள் சென்ற போது வழிதவறிப் போயிற்று.

மிகுந்த அலைச்சலுக்குப் பின்னர் ஒரு விவசாயியின் வீட்டைக் கண்டு பிடித்தனர். விவசாயியிடம் ஒரு இரவு தங்குவதற்கு அனுமதி கேட்க, ''உங்களில் இருவர் தங்க அறை கொடுக்க முடியும். மூன்றாவது நபர் ஆடு, பசு, பன்றி இவை தூங்கும் கொட்டகையில் தான் தூங்க வேண்டும்,'' என்று விவசாயி சொன்னார்.

ஆசிரியர் ,''நான் போய் அங்கு படுத்துக் கொள்கிறேன்.''என்றார். மற்ற இருவரும் அறையில் போய் படுத்துக் கொண்டனர்.

கொஞ்ச நேரம் ஆனவுடன் கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்த போது அங்கு ஆசிரியர் நின்று கொண்டிருந்தார். ''என்னால் அந்த நாற்றத்தைத் தாங்க முடியவில்லை.'' உடனே பலசரக்கு வியாபாரி,''சரி,சரி,நான் அங்கு போய் தூங்குகிறேன்,''என்று கூறி கொட்டகைக்குச் சென்றார்.

ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் கதவு தட்டப்பட்டது. திறந்து பார்த்தால் வியாபாரி வாந்தி எடுத்துக் கொண்டே நிற்கிறார்.இறுதியாக அரசியல்வாதி, தான் அங்கு போவதாகக் கூறிச் சென்றார்.

ஐந்து நிமிடத்தில் கதவு தட்டப்பட்டது. ஆசிரியரும், வியாபாரியும் கதவைத் திறந்து பார்த்தனர்.

இப்போது ஆடு, பசு, பன்றி இவையெல்லாம் நின்று கொண்டிருந்தன.

Saturday, June 21, 2014

மாமனாரின் அன்புப் பரிசு

ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்..
அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது..

ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.

மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது..
அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது..

" மாமியாரின் அன்புப் பரிசு..

"ரெண்டாவது மருமகனுக்கும்
இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார் வென்றார்.."

மாமியாரின் அன்புப் பரிசாக..

".மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே இல்ல..

மாமியார் கடைசியா பரிதாபமா 'லுக்கு' உட்டப்ப சொன்னான்.. "போய்த் தொலை.. எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா வளர்த்து வச்சிருக்க..?" மாமியார் செத்துட்டுது..

மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் HYUNDAI கார் நின்னுச்சு.." மாமனாரின் அன்புப் பரிசு" என்ற அட்டையோட….! 

Friday, June 20, 2014

அதிசய விளக்கு.......

ஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் – மூவரும் லஞ்ச் டைமில் டைனிங் டேபிளுக்கு செல்கின்றனர். 

மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. விளக்கைத் தேய்த்தவுடன் ஒரு பூதம் வெளிப்பட்டு,

"உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும்தான்" என்கிறது.

மூவருக்கும் ஆச்சரியம்!

உடனே கேஷியர் முந்திக்கொண்டு,

"நான் அமெரிக்காவுக்கு போகவேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு குளிக்க வேண்டும்" என்கிறார்.

பூதமும் "அவ்வாறே நடக்கட்டும்" என்று சொல்ல, அடுத்த வினாடியே கேஷியர் மறைந்துவிடுகிறார்.

அடுத்து சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ்…

"அழகான குட்டித்தீவில் எனக்கு ஒரு பங்களா வேண்டும். அங்கு எனக்கு பணிவிடைகள் செய்ய பணிப்பெண்கள் வேண்டும்" என்றார்.

அவருடைய ஆசையையும் பூதம் நிறைவேற்றியது.

கடைசியாக மேனேஜர்,

"நீங்கள் எதுவும் கேட்கவில்லையே?" என்றது பூதம்.

அலட்டிக்கொள்ளாமல் சொன்னார் மேனேஜர்,

"ஆபிசில் நிறைய வேலைகள் இருக்கிறது. நான் சாப்பிட்டு முடிப்பதற்குள் அந்த இரண்டு பேரும் ஆபிசில் இருக்கவேண்டும்!"

அரண்மனையில் ஒரு போட்டி!



விஷ பாம்புகள் நிறைந்த ஒரு குளத்தை நீந்தி கடந்து சாதனை புரிபவருக்கு 1000 வராகன் பொன், அல்லது 10 கிராமங்கள், அல்லது தன் ஒரே மகளான இளவரசியை திருமணம் செய்வது, இந்த மூன்றில் ஒரு பரிசை போட்டியாளர் தேர்ந்தெடுக்கலா ம்.

உயிர் பிழைப்பது சிரமம் என்பதால் போட்டி அறிவித்து வெகு நேரம் ஆகியும் யாரும் போட்டிக்கு வரவே இல்லை.

திடீர் என்று ஒரு இளைஞன் குளத்தில் குதித்ததும் மன்னருக்கு குஷி. உயிரையும் துச்சமாக மதித்து ஒரு சாதனையாளன் போட்டிக்கு தயாராகி விட்டானே?

ஒரு வழியாக நீந்தி பத்திரமாக கரையேறி விட்டான்.

அவனை கட்டி அணைத்து, பாராட்டுதல்களை தெரிவித்து,

"உனக்கு என்ன பரிசு வேண்டும் கேள்! ஆயிரம் வராகன் பொன்னா?"

"இல்லை..."

"பின்னே... 10 கிராமங்களா?"

"ப்ச்! வேண்டாம்..."

"ஆஹா! அப்படி என்றால் இளவரசியை திருமணம் செய்து கொள்கிறாயா?"

"தேவை இல்லை..."

"இது மூன்றில் ஒன்றை தானே பரிசாக அறிவித்து இருந்தேன். மூன்றுமே வேண்டாம் என்று சொல்லி விட்டாயே? ஆனாலும் உன்னை வெறும் கையுடன் அனுப்ப எனக்கு மனம் வரவில்லை. உனக்கு என்ன வேண்டுமோ அதை கேள், கட்டாயம் அதை தருகிறேன்..."

"என்னை எவன் இந்த குளத்தில் தள்ளி விட்டான் என்று தெரியனும்...!"

நம்ம நாராயணசாமி......

நாராயணசாமியும், ஒரு பெண்ணும் குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டனர்.

ஒரு நாள் இரவில்.....

“ஏங்க நம்மள‌ நம்ம வீட்டில உள்ளவங்க ஏத்துக்குவாங்களா..?”

“இந்த நேரத்தில் போய்... இந்த கதை தேவையா..? நேரத்தை ஏன்தான் இப்படி வீணடிக்கிறயோ..... !”

“என்னங்க இப்படி பெசறீங்க..!?”

“அதுக்கில்லை, நாம என்ன ஊர்ல உலகுத்துல செய்யாததையா செஞ்சிட்டோம். எல்லார் போலவும் காதலிச்சோம். வீட்டில் நம்ம காதலை ஏத்துக்கலை அதான் ,ஓடி வந்திட்டோம் நம்ம காதலை வீட்டில் ஏத்துக்கிட்டிருந்தா நாம ஏன் வீட்டைவிட்டு ஓடி வந்திருக்கப்போறோம் ”

“என்னதான் உங்களை நம்பி வந்திட்டாலும், என் ஞாபகம் எல்லாமே என் வீட்டில் உள்ளவங்க மேலதான் இருக்கு.....!”

“நீ சொல்றதும் சரிதான். யாருக்குதான் வீட்டு ஞாபகம் இல்லாமப் போகும்..?.. அதும் நீதான் வீட்டுக்கு மூத்தப் பொண்ணு ..... நீதான் தம்பி தங்கச்சிக்கு ஒரு உதாரணமா இருந்திருக்கனும்....? ஆனா நீயே .....இப்படி.... ”

“இப்ப மட்டும் என்ன புத்தர் மாதிரி பேசறிங்க..!? அன்னிக்கு இந்த அறிவு எங்கே போச்சாம்.....? என்னை ஓடிவர சொன்னதே நிங்கதானே..! ”

“சரி....சரி...இப்போ நீ என்னை என்னதான் செய்யசொல்ற.....?”

“நம்ம குடும்பத்தில உள்ளவங்க, நம்மை சேர்த்துக்கனும் முடியுமா..? ”

“..ம்.. எல்லாம் குழந்தைப் பொறந்தா சரியாகிடும்”

“ஆமா இப்படி சொல்லியே ஆறு பிள்ளை பெத்தாச்சி.. இப்போ.. இன்னும் ஒண்ணா....???!!!”