Monday, June 30, 2014

பக்கத்து நாட்டுத் தூதுவன் [புதிர்]


ஒரு நாட்டின் அரசவை கூடியிருந்தது. அரியனையில் அரசன் கம்பீரமாக வீற்றிருந்தான்.
அப்போது பக்கத்து நாட்டுத் தூதுவன் ஒருவன், அங்கு வந்தான்.அரசனைப் பணிவாக வணங்கினான்.
"தூதனே! உங்கள் நாட்டு அரசரிடம் இருந்து எனக்கு என்ன செய்தி கொண்டு வந்திருக்கின்றாய்?" என்று கேட்டான் அரசன்.
அவனோ ஏதும் பதில் கூறாமல் அமைதியாக நின்றான்.
"தூதனே!!....எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்" என்றான் அரசன்.
தூதுவன் தனது பையில் இருந்து ஒரு கோலக் கட்டியை எடுத்தான். அந்தக் கோலக்கட்டியினால், அரசனது அரியனையைச் சுற்றிலும் வட்டமாகக் கோடு போட்டான்.பிறகு ஏதும் பேசாமல் அமர்ந்துவிட்டான்.
அவன் ஏன் அப்படிச் செய்தான் என்று அரசனும் மற்றவர்களும் அவனைக் கேட்டார்கள். தூதுவனோ பதிலே பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.
தூதனின் செய்கையினால் அரசன் குழப்பம் அடைந்து, தனது அமைச்சர்களைப் பார்த்து, யாருக்காவது பொருள் புரிகிறதா? என்று கேட்டான்.எந்த அமைச்சரும் அதற்குப் பதில் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். ஏனென்றால் தூதுவனின் செய்கையினால் அவர்களும் குழப்பம் அடைந்திருந்தார்கள்.
அப்போது வயதில் மூத்த அமைச்சர் ஒருவர் எழுந்தார். " அரசே!!!...இந்தத் தூதுவனின் செய்கையில் ஏதோ ஒரு உட்பொருள் இருக்கிறது. நமது நகரத்தில் மாணிக்கம் என்று ஒரு அறிஞர் இருக்கிறார். அவர் புத்தி கூர்மை மிக்கவர். அவரால்தான் இதற்குப் பொருள் கூற இயலும். அதனால் அவரை அழைத்துவர உத்திரவிடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.
அரசனும் வீரர்களுக்கு உத்திரவு கொடுத்தான். வீரர்கள் மாணிக்கத்திடம் சென்றார்கள். அரசன் அழைப்பதாகக் கூறினார்கள்.மாணிக்கம் என்ன நடந்தது என்பதை வீரர்களிடம் விசாரித்துத் தெரிந்துகொண்டார். சிறிது ஆலோசனை செய்தார். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவராக, இரண்டு கோலி குண்டுகளைத் தேடியெடுத்து பையில் போட்டுக்கொண்டார்.உயிருள்ள ஒரு கோழியை கையில் பிடித்துக்கொண்டார்.
வாருங்கள் போகலாம் என்று வீரர்களுடன் அரசவைக்கு வந்து சேர்ந்தார்.
அரசவைக்கு வந்ததும் அரசனை வணங்கினார்.பிறகு அங்கே அமர்ந்திருந்த தூதுவனைப் பார்த்து நகைத்தார்
.தனது பையில் போட்டிருந்த கோலிக் குண்டுகளை எடுத்து, அவன் முன்னே உருட்டிவிட்டார்.
அதைக் கண்ட தூதுவன், தான் கொண்டு வந்திருந்த பையில் இருந்து நெல்லை எடுத்தான்.
அதை சபையில் எறிந்தான்.நிறைய நெல் அங்கே தரையெல்லாம் சிதறியது.
உடனே மாணிக்கம் தனது கையில் பிடித்திருந்த கோழியை இறக்கிவிட்டார்.
சிதறிக்கிடந்த நெல் முழுவதையும் கொத்தித் தின்றுவிட்டது.
அதைக் கண்டு திகைத்து நின்ற தூதுவன், அரசனை வணங்கிவிட்டுத் தன் நாட்டுக்குப் புறப்பட்டுப் போனான்.
அரசவையில் இருந்தவர்களுக்கு என்ன நடக்கிறது என்று ஒன்றுமே புரியவில்லை
.தூதனும் மாணிக்கமும் நடந்துகொண்ட விதம் ஒரே புதிராக இருந்தது.
என்ன நடந்தது என்று தெளிவுபெற விரும்புகிறான் அரசன்.
மாணிக்கம் விளக்கம் சொல்வதற்கு முன்பாக மன்ற நண்பர்களே நீங்கள் கூறுங்களேன்!!!