Friday, June 1, 2018

பாகற்காய் கசக்கும் காய்

கசக்கும் காய் என்றாலும் பாகற்காயை சமையலில் சேர்த்துக் கொள்வதில் இருந்தே இதன் முக்கியத்துவம் புரியும். பாகற்காயின் அறிவியல் பெயர் மொமோர்டிகா சாரன்டியா. தெற்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டவை. தற்போது ஆசியநாடுகள் முழுமையும் பரவலாக விளைகிறது. ஆண்டு முழுவதும் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும். கொடி வகையைச் சேர்ந்த இந்த காய், கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகைப்படும். 

பாகற்காயின் கசப்புச் சுவைக்கு பயந்தே பலர் பாகற்காயை சாப்பிடுவது இல்லை.
பாகற்காயின் மருத்துவ குணங்களைப் பற்றி பார்ப்போம்....

1) பாகற்காய், உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும். பசியைத் தூண்டும்., பித்தத்தைத் தணிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். இதனுடன் புளி சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த காயை, அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழுவை நீங்கும்.

2) ஒரு பிடி கொடிப்பாகல் இலையுடன், ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து, கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர, மாலைக்கண் நோய் குணமாகும்.

3) நீரிழிவு நோயாளிகளுக்கு, பாகற்காய் நல்ல மருந்தாகும்.மூன்று நாட்களுக்கு ஒருமுறை பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

4) பாகற்காய் “ஜூஸ்” குடித்து வந்தால், செரிமான அமிலம் சுரப்பது மேம்படும்., எனவே பசியும் அதிகரிக்கும். கணைய புற்றுநோய் அணுக்களை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.மேலும் பாகற்காய், எச்.ஐ.வி.க்கு எதிரான நோய்த்தடுப்பு சக்தியை வழங்குவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

5) தினம் இரண்டு வேளை 1 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கு நின்றுவிடும். பாகற்காய் சூட்டை கிளப்பும் என்பதால் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து சாப்பிடக்கூடாது.

6) பாகற்காய் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.

7)இந்தபாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.

8) பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து, வாந்தி எடுத்தால், அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும். உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு “கப்” பாகற்காய் “சூப்” எடுத்து, அதில் ஒரு “ஸ்பூன்” எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடும்.

9)பாகற்காயில் “பீட்டா-கரோட்டின்”மற்றும் “வைட்டமின்-ஏ” உள்ளதால், கண் சம்மந்தமான நோய்களுக்கு தீர்வாக உள்ளது. மேலும் இதில் உள்ள “வைட்டமின்-சி” மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், கண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

10) உடற்செயலின் போது 'சாரான்டின்' எனும் பொருளை பாலிபெப்டைடு-பி உருவாக்குகிறது. சாரான்டினானது குளு கோசை அதிகம் கிரகித்து சர்ச்கரையின் அளவை உடலில் கட்டுக்குள் வைக்கிறது. எனவே நாம் பாகற்காயை உண்ணுவதால் 'டைப்-2' நீரிழிவில் இருந்து பாதுகாப்பு தருகிறது பாகற்காய்.

இதில் உள்ள சத்துக்கள் என்ன?

1) வைட்டமின்-பி3, வைட்ட மின் பி-5, வைட்டமின்-பி6 போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும், இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் போன்ற முக்கியத் தாதுக்களும் பாகற்காயில் இருந்து உடலுக்கு கிடைக்கிறது.

2) பீட்டா கரோட்டின், ஆல்பா கரோட்டின், லுடின், ஸி-சாந்தின் போன்ற புளோவனாய்டுகள் உள்ளன. அத்துடன் வைட்டமின்-ஏ சிறந்த அளவில் உள்ளது. இவை புற்றுநோயை உருவாக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதோடு, வயது மூப்படைவதில் இருந்தும், வியாதிகள் தாக்காதவாறும் காக்கும்.

3) சிறந்த நோய் எதிர்ப்பு பொருளான வைட்டமின்-சி, பாகற்காயில் மிகுதியாக உள்ளது. 100 கிராம் பாகல் விதையில் 84 மில்லிகிராம் வைட்டமின்-சி உள்ளது. இயற்கை நோய் எதிர்ப்பு பொருளான இது, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டியடிக்கும்.

4)பாகல் விதையில் சிறப்புமிக்க சத்துப்பொருளான போலேட் உள்ளது. 100 கிராம் பாகற்காயில் 72 மைக்ரோகிராம் போலேட் உள்ளது. இது கருவில் வளரும் குழந்தைக்கு நரம்பு பாதிப்புகள் உருவாகாமல் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் தாதுவாகும்.

5) ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் பாகற்காய்க்கு உண்டு. மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தை போக்கும். பாகற்காயின் விதைகள் எளிதில் ஜீரணமாகும் நார்ப்பொருட்கள், தாதுஉப்புக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்பு பொருட்களைக் கொண்டது. * 'பாலிபெப்டைடு-பி' எனப்படும் குறிப்பிடத் தக்க சத்துப்பொருள் பாகற்காயில் காணப்படுகிறது. இதனை தாவரங்களின் 'இன்சுலின்' என்று கருதுகிறார்கள். ஏனெனில் தாவரங்களில் சர்க்கரை மிகுதியாகாமல் கட்டுப்படுத்துவது இதுதான்.

6) குறைந்த ஆற்றல் வழங்குபவை பாகற்காய்கள். 100 கிராம் பாகற்காயில் 17 கலோரி ஆற்றலே உடலுக்கு கிடைக்கிறது



---



மாடித் தோட்டத்தில் பாகற்காய் எப்படி வளர்ப்பது பற்றி தெரிந்து கொள்வோம்....

மாடித் தோட்டம்

தேவையான பொருட்கள்

1. Grow Bags அல்லது Thotti.

2. அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண் புழு உரம், செம்மண், வேப்பந்தூள், பஞ்சகாவ்யா.

3. விதைகள்

4. நீர் தெளிக்க பூவாளி தெளிப்பான்

5. பந்தல் போடுவதற்கான உபகரணங்கள்

தொட்டிகள்

தொட்டிகளில் மண் போடும்போது அதனுடன் சம அளவு இயற்கையாக மட்கும் குப்பைகள் சேர்க்க வேண்டும்.

தேங்காய் நார் கழிவு இரண்டு பங்கு, மாட்டுச்சாண‌ம் ஒரு பங்கு, சமையலறை கழிவு ஒரு பங்கு என முழுவதும் இயற்கை உரங்களை கொண்டும் தொட்டியை நிரப்பலாம். இந்த கலவை தயாரானதும் உடனே விதைக்க கூடாது. 7-10 நாட்கள் கழித்து விதைப்பு செய்ய வேண்டும்.

இது கொடி வகை என்பதால் 3 அடிக்கு மேலாக இருக்கும்படி தொட்டிகளில் மண் மற்றும் உரக்கலவையை நிரப்ப வேண்டும்.

விதைத்தல்

ஆரோக்கியமான மற்றும் நோய் தாக்காத விதைகளை தேர்ந்தெடுத்து விதைக்க வேண்டும். இது கொடி வகை என்பதால் 3 முதல் 5 விதைகள் வரை ஊன்றலாம். வளர்ந்த செடிகளில் ஏதாவது வளர்ச்சி குறைந்து காணப்பட்டால் அந்த செடியை மட்டும் நீக்கி விட வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைகளை விதைத்தவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். இரு நாட்களுக்கு ஒருமுறை நீர் ஊற்ற வேண்டும்.

பந்தல் முறை

மாடியில் பந்தல் போடுவது எளிமையான ஒன்று ஆகும். அதற்கு நான்கு சாக்கில் மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை ஆழமாக ஊன்றி மூலைக்கு ஒன்றாக நான்கு சாக்குகளையும் நான்கு மூலைகளில் வைக்க வேண்டும். அடியில் சிறு கற்களை கொண்டு மேடை போல் அமைத்து அதன்மீது சாக்கு பைகளை வைப்பது சிறந்தது. பின்னர் இதில் கயிறு அல்லது கம்பிகளை குறுக்கு நெடுக்காக கட்ட வேண்டும். இந்த பந்தலில் கொடிகளை படர விட வேண்டும்.

உரங்கள்

செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.

வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு கிளறிவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.

பாதுகாப்பு முறைகள்

வளரும் நுனி கிளைகளை கவாத்து செய்வதால் அதிக கிளைகள் தோன்றுவதற்கு ஏதுவாக இருக்கும். 15 நாட்களுக்கு ஒருமுறை கழிவுகளைக் கிளறுவதால் கீழுள்ள கழிவுகள் மேலும், மேலுள்ள கழிவுகள் கீழும் செல்வதால், கழிவை மக்கச் செய்யும் நுண்ணுயிர்களின் செயல்பாடு துரிதமாக இருக்கும்.

பூச்சி தாக்குதலை தவிர்க்க வாரம் ஒரு முறை வேம்பு பூச்சிவிரட்டியை 2 மில்லி என்ற அளவில் 1 லிட்டர் நீரில் கரைத்து மாலை வேளையில் செடிகளின் மேல் தெளிக்க வேண்டும்.

பஞ்சகாவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பைகளில் ஊற்ற வேண்டும். இது சிறந்த நோய் தடுப்பானாக செயல்படும்.

அறுவடை

இது 2 முதல் 3 மாதம் வரை பயன் தரும். காய்களை முற்றி விடாமல் சரியான பருவத்தில் இருநாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்ய வேண்டும்